HISTORY

கோனேரின்மைகொண்டான்

கோனேரின்மைகொண்டான்

பாண்டியர், சோழர் மற்றும் கொங்கு அரசர் கல்வெட்டுகளில் காணப்படும் கோனேரின்மைகொண்டான் என்ற சொல்லைக் குறித்து இந்த ஆய்வு கட்டுரை.

முன்னோடிக் கல்வெட்டாய்வாளர்களான ஊல்சு வெங்கையா மற்றும் கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் இச்சொல் குறித்து ஓரளவு விளக்கியுள்ளனர்.

முதல் ராஜேந்திரனின் திருவாலங்காட்டுப் பட்டயத்தைப் பதிப்பித்த கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் இச்சொல் பற்றி மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தமிழாக்கம் வருமாறு

“கோநேரின்மைகொண்டான். கோநோன்மை கொண்டான், கோநேரிம்மைகொண்டான். கோனேரிமேல் கொண்டான், கோநேர்மைகொண்டான்,

கோநோன் இன்மை கொண்டான் என்று பலவாறாக இச்சொல் தனித்தோ அல்லது பட்டயம் வழங்கும் அரசன் பெயரைத் தொடர்ந்தோ வருகிறது. ஒரு பட்டம் என்ற வகையில் இதன் பொருள் ஊல்சு அவர்களால் விவாதிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதக் கல்வெட்டுகளில் வரும் ஓர் இணையான

தொடரைக்கொண்டு இன்னொரு விளக்கத்தை திரு வெங்கையா கொடுத்துள்ளார். இந்தச் சொல் பெரும்பாலும் அரசனின் ஆணையைக் கொண்ட பகுதியை அடுத்து வரும் துணைப்பகுதியில் வரும். இவ்விரு பகுதிகளும் ஒரே கல்வெட்டின் பகுதிகளாகவோ அல்லது ஒரே சுவரில் அருகருகே பொறிக்கப்பட்ட தொடர்புடைய தனிக்கல்வெட்டுகளாகவோ வரும். ஆகவே இது முதலில் பெயர்கொண்டு குறிப்பிடப்பட்ட அரசனை மிகுந்த மரியாதையோடு சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. இதன் சரியான வடிவம் ‘தன்னிகரற்ற அரசன்’ என்று பொருள் தரும் கோநேரின்மை கொண்டான் ஆகலாம்”.

ஊல்சும் இதற்கு முன்பு இப்படி ஒரு கருத்துக் கொண்டிருந்தார். இச்சொல்லை கோ -நேர் -இல்-மை -கொண்டான் என்று பகுத்து ‘அரசருள் தன்னிகரற்றவன் என்ற பட்டங் கொண்டவன்’ என்று பொருள் கொள்ளலாம் எனக் கருதினார் வெங்கையாவின் விளக்கம் வேறு வகையாக இருந்தது. திருமால்புரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் உள்ள கோநோன்-இன்மை கொண்டான் என்ற வடிவம் குத்தாலம் கல்வெட்டு ஒன்றில் அவர் கண்ட கோநோ – இன்மை கொண்டான் என்ற சரியான

வடிவத்திலிருந்து சிறிது வேறுபட்டது என்று கருதினார். பிந்திய சொல்’அரசன் நலமாக உள்ளார்’ எனப் பொருள் தரும். இது சமஸ்கிருதக் கல்வெட்டுகளில் வரும் ‘குஸலி’ என்ற சொல்லோடு தொடர்புடையது என்று அவர் கொண்டார். இக்கருத்துக்குறித்து கிருஷ்ண சாஸ்திரி கருத்தளிப்பு எதுவும் கொடுக்கவில்லை; அவருக்கு அது உடன்பாடில்லை என்று கருதவேண்டியுள்ளது.

வெங்கையாவின் கருத்துக்கு எதிராக கீழ்க்காணும் குறிப்புகளைச் சுட்டலாம். குத்தாலம் கல்வெட்டில் ‘கோநோ-இன்மை-கொண்டான்’ என்று அவர் படித்த அதே சொல்லை ‘கோநேர்-இன்மை கொண்டான்’ என ஊல்சு படித்துள்ளார். கல்வெட்டில் ‘நோ’. ‘நேர்’ ஆகியவற்றுக் கிடையில் உருவ வேறுபாடு ஏதும் இல்லை. மெய்யைக் குறிக்க இடும் புள்ளி பெரும்பாலும் பொறிக்கப்படுவதில்லை. இடத்துக்கு ஏற்பக், கல்வெட்டைப் படிப்பவர் புள்ளியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வெங்கையா புள்ளியைச் சேர்த்துப் படித்துள்ளார். எனினும் சாலை கிராமத்தில் உள்ள ஒரு முற்பாண்டியர் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டில் (910) கோநோ-இன்மை கொண்டான் என்றுள்ளது. இங்கு ‘நோ’ என்றே உள்ளது. வட்டெழுத்தைப் பொறுத்த வரை ‘நோ’, ‘நேர்’ ஆகியவற்றுக்கிடையில் மயக்கம் இல்லை வெங்கைய்யாவின் பாடத்தை இது ஓரளவு உறுதி செய்யலாம். ஆயினும் ‘கோ நோ யின்மை கொண்டான்’ என்பதே சரியான வடிவமாக இருக்கமுடியும். இந்தச் சரியான வடிவம் எக்கல்வெட்டிலும் வரவில்லை. மேலும் ‘நலமாக உள்ளார்’ என்பதைத் தெரிவிக்க ‘நோயின்னை’ என்ற எதிர்மறைச் சொல் ஏன் ஆளப்படவேண்டும்?

இச்சொல் சார்ந்த எல்லாச் செய்திகளையும் கீழ்வருமாறு வகைப்படுத்திப் பார்க்கலாம். ஏறக்குறைய ஆறாயிரத்தைநூறு கல்வெட்டுகளுள் 144 கல்வெட்டுகளில் இச்சொல் வருகிறது. இந்த எண்ணிகையுள்ளும் பல்வேறு வடிவங்கள் உள்ளன. இச்சொல்லில் வரும் ‘ந’, ‘ன’ வேறுபாட்டை (கோநேரி, கோனேரி) தவிர்த்துவிட்டால் ஒவ்வொரு வடிவத்தின் நிகழ்வு எண்ணிக்கைகள் கீழ்வருமாறு உள்ளது:

1) கோனேரின்மை-கொண்டான்-85

2) கோனேரில்மை-கொண்டான்-1

3) கோனேரிமேல்-கொண்டான்-19

4). கோனேரிமேன்- கொண்டான்-6

5) கோனேரி(ன்) மேல்-கொண்டான்-7

6) கோனேரி(ம்)மை கொண்டான்-12

7) கோனேரி-இம்மை-கொண்டான்-1

8) கோனேர்-இன்மை-கொண்டான்-

(கோனோ-இன்மை கொண்டான்?)-7

9) கோனேர்மை-கொண்டான்-1

10) கொனோன்- இன்மை-கொண்டான்-2

11) கோனோன்மை-கொண்டான்-3

வடிவம் 1, 2-க்குள் பெரும்பாலும் வேறுபாடு இல்லை. வடிவம் 6,7 ஆகியவற்றையும் முதலிரண்டுடன் சேர்க்கலாம். 8-க்கும் 1-க்கும் வெங்கையாவின் வேறுபட்ட பாடம் தவிர வேறு வேறுபாடில்லை. 3,4-க்குள் உள்ள வேறுபாடு சந்தி மட்டுமே. 3, 4, 5 ஆகியவற்றை ஒன்றாகக் கருதலாம். ஆகக் கடைசி ஒரு சிலவற்றைத் தவிர எல்லா வடிவங்களையும் இரண்டு வகைக்குள் அடக்கலாம். 1) கோனேரின்மை-கொண்டான் (106),2) கோனேரிமேல்-கொண்டான் (32). இரண்டாவது வகை மொத்தத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவே;மேலும் அந்த வகை பிற்கால, அதாவது பதின்மூன்றாம் நூற்றாண்டு மற்றும் பிந்திய கல்வெட்டுகளிலேயே வருகின்றன. ஆகவே கோநேரின்மை-கொண்டான் என்ற வடிவமே சரியான மூல வடிவம் என முடிவு செய்யலாம். இருப்பினும் எல்லா வடிவங்களும் ஒரே சொல்லைச் சுட்டுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் ஒரே அரசன் காலத்திலேயே வேறு வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. காட்டாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (1178-1218) ஐந்து வடிவங்கள் (1, 3, 4, 6, 7) விரவி வருகின்றன.

இந்தச் சொல்லின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை இனி பார்க்கலாம். இச்சொல் வரும் கல்வெட்டுகள் யாவற்றிலும் (ஒன்றிண்டைத்தவிர)’ அரசனிடமிருந்து கொடையளிக்கப் பெற்றவருக்கு அனுப்பப்பட்ட நேரடி ஆணையைக் குறித்தனவாகும். இவற்றில் ஐம்பது விழுக்காடு மட்டும் அரசனின் பெயர் கொண்டுள்ளன. மேலும் அரசன் பெயர் உள்ள கல்வெட்டுகளில் அரசன் பெயரும் கோனேரிம்மைகொண்டான் என்ற சொல்லும் தொடர்ச்சியாக அல்லது அருகருகே ஒருசில கல்வெட்டுகளில் மட்டுமே வருகின்றன. மாறாக அரசன் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் கோனேரின்மைகொண்டான் வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இதைக் கிருஷ்ண சாஸ்திரியும் கவனித்துள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்தச் சொல்

வழக்காற்றுக்குக் கீழ்வருமாறு பொருள் விளக்கம் செய்யலாம்.

அரச ஆணைகள் கொண்ட கல்வெட்டுகளாகட்டும், செப்புப்

பட்டயங்களாகட்டும், யாவுமே அரசனின் மூல ஆணைகள் அல்ல. அவை அரசனின் வாய்மொழி ஆணைகளை முறையாக விரிவு படுத்தி எழுதப்பட்ட பாடங்களாகும். உள்ளபடியே பெரும்பாலானவற்றில் ‘திருமுகப்படி’ என்ற சொல் வருகிறது. அரசனின் ஆணைப்படி என்று இதற்குப் பொருள். அரசனின் வாய்மொழியாகக் கொடுக்கப்பட்ட ஆணையைத் திருமந்திர ஓலை எனப்பட்ட அரசனின் அணுக்க எழுத்தர் அல்லது செயலரால் எழுதப்பட்ட பிறகு அது ஓலை அல்லது தீட்டு எனப்பட்டது. இது அதிகாரிகள் முதலிய பல உயர் அலுவலரால் சரிபார்க்கப்பட்ட பிறகு யாவருக்கும் அறிவிக்கவும் கொடைபெறுபவருக்கு உரிய ஆவண நகல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே ஒரு முழுமையான அரச சாஸனம் அல்லது கல்வெட்டு அரசனின் வாய்மொழி ஆணை, அதனை அரச அலுவலர் ஒப்பீடு செய்தமை ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். ஐம்பது விழுக்காடு கல்வெட்டுகளே இப்படி முழுமையானவை. ஆனால் பெரும்பாலானவை வாய்மொழி யாணையைப் பெற்றுள்ளன. இந்த வாய்மொழியாணைப் பகுதிகளின் தொடக்கத்தில் தான் கோனேரின்மைகொண்டான் என்ற சொல் வரும்.

இந்தக் கருதுகோளைச் சோழரின் இரு பெரிய சாஸனங்களான ஆனைமங்கலப் பட்டயம், திருவாலங்காட்டுப் பட்டயம் ஆகியவற்றின் மூலம் விளக்கலாம். முன்னது கோநேரின்மை கொண்டான் என்ற சொல்லுடனும் பின்னது கோநேர்-இன்மை- கொண்டான் என்ற சொல்லுடனும் தொடங்குகின்றன. அரசனின் வாய்க்கேழ்விப் பகுதி முற்றிலும் கொடுக்கப்பட்ட பிறகு அரசனின் பெயர் சுட்டப்படுகிறது. பாண்டியர் கல்வெட்டுகளில் பெரும்பாலானவற்றிலும், சோழரின் கல்வெட்டுகளில் ஒருசிலவற்றிலும் கோனேரின்மை கொண்டான் என்ற தொடர் கல்வெட்டின் இடைப்பகுதியில் வருகிறது. ஆனால் இவைகளில் இச்சொல்லுடன் தொடங்கும் பிற்பகுதி மற்ற கல்வெட்டுப் பகுதியிலிருந்து தனித்துக் காணப்படும். உள்ளபடியே பல இடங்களில் இப்பகுதிகள் தனித்தனியாக, ஆனால் ஒரே சுவரில் அருகருகே பொறிக்கப்பட்டுள்ன. இந்த உண்மையைக் கிருஷ்ண சாஸ்திரியும் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேலே பார்த்தோம். கோனேரின்மை கொண்டானுடன் தொடங்கும் பகுதி தன்மை வினையுடன் காணப்படும். அதாவது அரசன் வாயிலிருந்து நேரடியாகச் சொல்லப்பட்டது அது என்று சொல்லலாம். இதல்லாத மற்றப் பகுதி வழக்கமாக அரசனின் பெயர் கொண்டுள்ளது. அரச அலுவலர்களின் ஒப்பிட்டுச் செய்தியைக் குறிப்பிடும் இப்பகுதியும் அரசனின் வாய்மொழி ஆணையைச் சுட்டும்.ஆனால் அது பிறவினை கொண்டு காணப்படும்.

வாய்மொழி ஆணையை ஓலையில் எழுதுகிற அரசுனுடைய அணுக்கச் செயலர் அரசனின் பெயரைக் குறிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு இச்சொல் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் அரசனே தன் பெயரைச் சுட்டுவது போல எழுதுவது குடிமக்களுக்கு விசித்திரமாகக் காணப்படும். ஊல்சும் கிருஷ்ண சாஸ்திரியும் கொண்டது போல் இச்சொல் ‘தன்னேரில்லாதவன்’ எனப் பொருள்படும். அரசனின் உன்னத ஆற்றலை வெளிப்படுத்தும் இச்சொல் மக்களிடம் பயத்தையும் மரியாதையையும் உண்டாக்கியிருக்கும். அரசன் என்று மட்டும் பொருள் தரும் ‘கோ’ அல்லது ‘கோன்’ என்ற சொல் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற சொல்லுக்கு மாற்றாக முடியாது.

இதுவரை கிடைத்துள்ள தரவுகளிலிருந்து, இச்சொல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அரச பரம்பரை முறையில் பார்த்தால் பாண்டியர் கல்வெட்டுகளில் 72 தடவையும், சோழரின் கல்வெட்டுகளில் 58 தடவையும், கொங்கு அரசர் கல்வெட்டுகளில் 14 தடவையும் வந்துள்ளது. சோழர் காலத்தைப் பொறுத்த வரையில் அன்பில் பட்டயத்தில் (960) முதன்முறையாக வருகிறது. பாண்டியர் கல்வெட்டுகளில் பத்தாம் நூற்றாண்டில் உள்ள ஒன்றிரண்டைத் தவிர மற்றவை 12ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்புமே வருகிறது. சோழர் பகுதியிலும் காலப்போக்கில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. 956-1178 காலப் பகுதியில் ஆண்ட அரசர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அல்லது இரண்டு கல்வெட்டுகளில் மட்டும் மேற்படி சொல் வருகிறது. இரண்டாம் ராஜராஜனுக்கு மூன்று கல்வெட்டுகள் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) ஆட்சியில் மிக அதிகப்படியாக 20 கிடைக்கின்றன. இதற்குத் தனித்த காரணம் இருக்க வேண்டும். அதாவது இவ்வரசன் ஆட்சியில் குறுநில அரசுகளின் ஏழுச்சி ஒரு பிரச்சினையாக, அரச அதிகாரத்துக்கு ஒரு முரணாக வெளிப்பட்டது. ஆகவே அரசன் தன் அதிகாரத்தை நிலைநாட்ட மிகுந்த முனைப்புக்காட்ட வேண்டியிருந்தது. அதன் ஒரு வெளிப்பாடே அக்காலத்தில் கோனேரின்மைகொண்டான் கல்வெட்டுகளின் பெருக்கமாகும். பொதுவாகப்பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு அரசர்கள் தங்கள் குடிகளுக்கு அடிக்கடி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தித் தங்களை அடையாளம் காட்டவேண்டிய நெருக்கடி இருந்தது என்பதை இச்சொல்லாட்சியிலிருந்து பெறலாம்.

பதிவு -பேராசிரியர் கண்ணண் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு தலைமை ஆய்வாளர்

பாண்டியர்கள்_தேடி_பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *