HISTORY

கொற்றவை (Kottravai)

தமிழ்நாட்டில் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு ஒரு சிறப்பிடம் பண்டு தொட்டு இருந்து வருகிறது.

உலக அளவில் நோக்கினாலும் பெண் தெய்வ வழிபாடு முதன்மை பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

சிந்து சமவெளியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும் பெண் தெய்வ வழிபாட்டின் முதன்மையை, சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. வழிபாட்டு வளர்ச்சியில் படைத்தல் என்னும் ஒரு பெரிய செயல் பெண்ணிடம் இருப்பதை அறிந்த மானிடம் பெண்களுக்கு முதன்மை அளித்து பெண்மையைப் போற்றி வழிபட்டு வந்துள்ளதை நாம் காண்கிறோம். இவ்வாறு தோற்றமும் வளர்ச்சியும் கால்கோளும் பெற்ற பெண் தெய்வ வழிபாட்டிற் கான வழிபாட்டிடங்களும் வழிபாட்டு முறைகளும் பலதிறப்பட்டனவாய் அமைந்து உள்ளன.

நாட்டார் வழிபாட்டு மரபில் பெண் தெய்வ வழிபாடு அன்று தொட்டு இன்றுவரை உயரிய நிலையிலேயே இருந்து வருவது கண்கூடு. நாட்டுப்புற ஊர்களில் இயற்கைத் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயற்கைச் சக்திகளைக் கூடப் பெண்ணாகப் பார்த்து வழிபடுவது மாந்தர் இனத்தின் பண்பாக உள்ளது. மண்ணையும் மரத்தையும் ஆற்றையும் பெண்ணாக எண்ணிப் போற்றி வழிபடும் வழிபாடு இன்றும் உள்ளது. இயற்கையின் எல்லையில்லாச் சக்தியை அளிக்கும் ஆற்றல் பெண் தெய்வத்திற்கே உண்டு என்று எண்ணும் மரபு நாட்டார் மரபாக உள்ளது. நாட்டார் மரபாகப் போற்றப்பட்டு வந்த தாய்த்தெய்வ வழிபாடுகள் பின்னர் ஆகம வழிபாடுகள் தோன்றிய கால கட்டத்தில் ஆகமக் கோயில்களின் வழிபாட்டிலும் இடம் பெறத் தொடங்கின. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருக்கடவூர் அபிராமி, திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி ஆகிய வழிபாடுகள் புராண வரலாறுகளோடு இணைக்கப்பட்டு ஆகம வழிபாடுகளோடு இணைந்துள்ளன.

தாய்த் தெய்வ வழிபாட்டின் முதன்மை அறிந்த பண்டைய அரசர்கள் தாய்த் தெய்வத்திற்கெனத் தனிக் கோட்டம் (திருக்காமக் கோட்டம்) அமைத்து ஆகமக் கோயில் வழிபாட்டில் இணைத்துள்ளமையை வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. நாட்டார் வழிபாட்டில் தோற்றம் பெற்ற தாய்த்தெய்வ வழிபாடு ஆகம வழிபாட்டிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றது.

தமிழ் இலக்கிய ஆய்வு உலகில் வழிபாடு பற்றிய ஆய்வுகள் பல வந்துள்ளன. பெண் தெய்வ வழிபாடுகள், சக்தி வழிபாடுகள் என்ற நிலையில் பல ஆய்வுகள் நிகழ்ந்து உள்ளன. நாட்டார் வழிபாடுகளிலும் ஆகமக் கோயில் வழிபாடுகளிலும் இதுபோன்ற ஆய்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

மீண்டும் பண்டைய வழிபாடுகள் தொடர முயற்சி செய்வோம்
பாண்டியர்கள் தேடி பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *