HISTORY

கொற்றவை வழிபாடும் மறவரும்

கொற்றவை வழிபாடும் மறவரும்

தாய்த் தெய்வங்களும் இலக்கியங்களும்

சங்க இலக்கியங்கள் தாய்த் தெய்வத்தை பலவாறு புகழ்ந்து பேசுகின்றன.

அணங்கு (அகம். 16,22) ஐயை (வச்சணந்திமாலை 39), கடல்கெழு செல்வி (அகம். 370, நற்றிணை 155), கானமர் செல்வி (அகம். 345), கொற்றவை (திருமுருகாற்றுப்படை 258). பாவை (அகம். 345, 369, 370), பழையோள் (திருமுருகாற்றுப்படை 59) என்று பலபடப் பேசுகின்றன. இவை அனைத்தும் உமையை மையமாகக் கொண்டனவாகவே தெரிகிறது.

சிலப்பதிகார வழக்குரை காதையில் கண்ணகியின் கோலத்தை வாயிலோன் வாயிலாகக் கூறவந்த இளங்கோவடிகள்

🔱அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு சூர்உடைக் கானகம் உகந்த காளி தாரூகன் பேரூரம் கிழிந்த பெண்ணும் அல்லள் என்று கூறுவதும் இக்கருத்தை உறுதி செய்யும்.

வெற்றியும் வெற்றிச் செல்வியும்

கொற்றம் என்னும் சொல், கொல், வெற்றி, வீரம், வன்மை என்று பல பொருள்தரும் ஒரு சொல்லாகும்.

இது சங்க இலக்கியங்களில் பலவிடத்து பயின்று வந்துள்ளது. கொற்ற நீள்குடை கொடித்தேர்ச் செழிய (புறம் 24)

வருபடை தாங்கி பெயர்புறத்து ஆத்தந்து

பெருபடை தரும் கொற்றமும்

(புறம் 35)

அறநெறி – முதற்றே அரசின் கொற்றம் (புறம் 55)

வீரம் என்ற பண்பும், வலிமை என்ற திறமும் ஒன்றுசேருகின்ற போதுதான் வெற்றி கிடைக்கின்றது. ஆகவே வெற்றி தருபவள் கொற்றவை. அருந்தொழில் முடிக்கும் பெருந்திறல், மன்னர்க்கும், மறவர், எயினர்க்கும் வெற்றி தேடித் தருபவள் கொற்றவையானதில் வியப்பில்லை.

உமையவள் கோவில் சிவனுடைய ஆலயத்தோடு சேர்ந்ததாக இருக்க, தூர்க்கையின் கோயில் தனித்து பெரும்பாலும் கிழக்குப் பார்த்த நிலையில் அமைந்திருக்கும். கொற்றவை கோவில் ஊரின் வடக்கே வடக்குப் பார்த்த நிலையில் காட்டினை நோக்கியவாறு தனியாக அமைந்திருக்கிறது. இதனால் இத்தெய்வத்தை கானமர் செல்வி என்றும் காடுகாள் என்றும் வடக்கு வாசல் செல்வி என்றும் அழைக்கின்றனர். இக் கொற்றவை எட்டுக்கைகளைப் பெற்று, வலக்கையில் சூலமும் மற்றக் கைகளில் கேடயம், வாள் போன்றவைகளை ஏந்தி, கோரைப் பற்களைக் காட்டி, அசுரன் உருவைக் காலால் மிதித்த நிலையில் இன்று கோவில்களில் இருக்கக் காண்கிறோம்.

#பாண்டியர்கள்_தேடி_பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *