விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்தில் விருதுநகரிலிருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூர் பாவாலி மதுரை நாயக்கர்கள் காலத்தில் பாண்டிய மண்டலம் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டபோது பாவாலியும் ஒரு பாளையப்பட்டாக அமைந்தது. இதனைத் தெலுங்கு பேசும் கம்பளத்து நாயக்கர் என்னும் ஒரு பிரிவினர் தலைமைபெற்று நிருவகித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தப்பாளையமும் பிற நாயக்கர்களின் பாளையங்களைப் போலவே அடக்கு முறைக்கு ஆட்பட்டது.
இவ்வூரில் இருந்த பாளையக்காரரை எச்சரிக்கும் விதத்தில் மோகர் பானர்மேன் என்னும் ஆங்கிலேய இராணுவ அதிகாரியால் ஓர் எச்சரிக்கைத் தகவல் செப்புப்பட்டயம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இவ்வூரில் அமைந்திருந்த சிறுஅரண்மனையின் முன்பாக ஒரு தூணில் பொறுத்தி மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். இது வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் ஏற்கனவே அறியப்பட்ட தகவலே. இது போன்ற செப்புப்பட்டயம் எட்டயபுரம், பெரிய சொல்லப்பட்டி, கோல்வார்பட்டி ஆகிய பாளையங்களிலும் வைக்கப்பட்டு இன்றும் மக்கள் பார்வையில் உள்ளது. இது பலரும் அறிந்த செய்தியே.
(12-2-2009) தொல்லியல் துறையின் முதன்மைச் செயலாளர் (ம) ஆணையர் முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆப, அவர்களும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திருரகுபதி, இஆப, அவர்களும் தொல்லியல் அலுவலர் முனைவர் சொ.சாந்தலிங்கமும் இப்பட்டயத்தினைப் பார்வையிட்டனர். இரவு சுமார் 7.30 மணியளவில் சீருத்துகளின் வெளிச்சத்தில் பட்டயம் பொறுத்தப்பட்டிருந்த கல் தூணைப் பார்வையிட்ட போது
அக்கல்லில் வீரன் ஒருவனின் உருவம் கோட்டுருவமாகச் செதுக்கப்பட்டிருந்ததைக்
கண்டறிந்தனர். இது ஆய்வாளர்கள் யாவரும் இதுவரைக் காணாத காட்சியாகும்.
நல்ல உடல் வலிமை மிக்க வீரன் ஒருவன் வலக்கையில் வாளும், இடக்கையில் கேடயமும் பிடித்திருக்க இரண்டு கால்களையும் முன், பின்னாக வைத்து வீரநடையபோடும்
பாவனையில் இவ்வுருவம் காணப்படுகிறது. உருவத்தின் தலை சற்றே தொங்கியது போலவும் தோற்றமளிக்கிறது. இவ்வுருவத்திற்கும் செப்பேட்டில் கூறப்பட்டிருக்கும் எச்சரிக்கைக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலவும் தோன்றுகிறது.
இச்செப்பேடு 21-11-1799 அன்று மேஜர் பானர்மேனால் வெளியிடப்பட்டுள்ளது. 16-11-1799 அன்று வீரபாண்டியக் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அச்செய்தியைத் தெரிவித்து பிறபாளையக்காரர்களை எச்சரிக்கிறது இப்பட்டயம். ஆங்கியலேயர் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பாளையக்காரர்கள் எவரும் அரசுக்கு எதிராகச் செயப்பட்டாலோ, படை திரட்டினாலோ, ஆயதங்கள் வைத்திருத்தாலோ, அரசுக்கு எதிராகக் கலகம் செய்தாலோ கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும் என எச்சரிக்கிறது செப்பேடு, அதே செய்தியை தூக்கிலிடப்பட்ட வீரன் உருவத்தையும் கல்லில் பொறித்துக் காட்டியுள்ளதாகவே இத்தூண் நமக்குத் தோற்றமளிக்கிறது. ஆனால் பகல் நேரத்தில் பார்க்கும் போது உருவம் சரியாகப் புலப்படுவதில்லை. இரவு நேரவெளிச்சத்தில் உருவம் நன்கு காணப்படுகிறது. இப்பட்டயத்தைப் பொறுத்த அளவில் இது ஒரு புதிய செய்தியாகவே கருதலாம்.
பாளையப்பட்டாக இவ்வூர் பெயர் பெறுவதற்கு முன்பாகவே. கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில் பிற்பாண்டியர் காலத்தில் இது ஒரு முக்கிய சைவத்தலமாகவும், வணிக மையமாகவும் திகழ்ந்திருக்கிறது. இவ்வூரின் கண்மாய் அருகில் உள்ள குடிநீர்க் கிணறு ஒன்றில் வைத்துக்கட்டப்பட்டுள்ள கல்வெட்டுப் பொறித்த கல் ஒன்றின் மூலம் இச்செய்தி நமக்குத் தெரியவருகிறது. இக்கிணறு ‘பாண்டியன் கிணறு’ என இன்று இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. ஆனால் சுமார் இருநாறு ஆண்டுகளுக்குள் இக்கிணறு தோண்டப்பட்டு கல்லால் சுற்றுச்சுவாகள் கட்டப்பட்டிருக்கலாம். இவ்வூரில் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டளவில் பிற்பாண்டியர்களால் கட்டப்பட்ட ஓர் சிவன் கோயில் ‘திருவாலீசுவரம்’ என்னும் பெயரில் இருந்துள்ளது. அக்கோயில் எக்காரணத்தாலோ முற்றிலும் அழிந்து போயிருக்க வேண்டும். அங்கிருந்த துண்டுக்கற்களைக் கொண்டுவந்து இக்கிணற்றின் சுற்றுச் சுவர்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன. இங்கு இரண்டு கற்களில் பிற்பாண்டியர்காலக் கல்வெட்டுகள் உள்ளன. இரண்டும் துண்டுக் கல்வெட்டுகளே ஒன்றின் பாடம் வருமாறு:
1.சடையவர்மரான குலசேகர
2. தேவற்கு யாண்டு மூன்றாவதினெதிரா
3. மாண்டு செங்குடி நாட்டுப் பாவாலியில்
4. திருவாலீஸ்வரமுடையார் கோயில் சிவா
5. ராமணிரோம் இவ்வூர் அஞ்ஞற்றுவன்வி
6. யாபாரி கருப்பூருடையான் தேவள் திரு..
பிற்பாண்டியர் வரலாற்றில் சடையவர்மன் குலசேகரன் என்ற பெயரில் இரண்டு பாண்டிய
மன்னர் ஆண்டுள்ளனர். முதலாமவன் கி.பி. 1162-1177 வரையிலும் இரண்டாமன்
கி.பி. 1190-1216 வரையிலும் ஆட்சி செய்துள்ளனர். இக்கல்வெட்டை இவர்களில் ஒருவர் காலதத்தாகக் கருதலாம். எனவே கி.பி.12-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்தது இக்கல்வெட்டு
இக்கல்வெட்டின் மூலம் இவ்வூரின் பழம் பெயரே பாவாலி தான் என்பதும், இது செங்குடி நாடு என்னும் உட்பிரிவில் அடங்கியிருந்தது என்றும் தெரியவருகிறது. திருவாலீசுவரம் என்னும் பெயரில் ஒரு சிவன் கோயில் இருந்து அது சிவபிராமணர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் செயல்பட்டு வந்த ஐநநூற்றுவர் என்னும் வணிகக குழுவைச் சேர்ந்த கருப்பூருடையான் தேவன் என்பவன் இக்கோயிலுக்கு ஏதோ கொடை அனித்திருக்கலாம். கல்வெட்டு முழுமையாகக் கிடைக்காமையால் அனைத்துச் செய்திகளையும் அறியமுடியவில்லை.
மற்றொரு துண்டுக்கல்வெட்டு இரண்டு வரிகளையே கொண்டுள்ளது. மிகவும் தெளிவற்ற நிலையில் உள்ளது. இடிந்து போன திருவாலீசுவரம் சிவன் கோயிலின் கற்களைக் கொண்டு நாயக்கர்கள் காலத்தில் சுப்பிரமணியர் கோயிலி கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தியின் சிலை கி.பி. 12-13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்குள்ள பலிபீடத்திலும் இதே காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது.
பலிபீடக் கல்வெட்டு
பலிபீடத்தில் உள்ள கல்வெட்டும் தொடக்கமும் முடிவும் இன்றி உள்ளது. ஏற்கனவே சிவன் கோயிலில் இருந்த கல்வெட்டுக் கற்களைக் கொண்டு இப்பலிபீடம் கட்டப்பட்டுள்ளது. பள்ளியறை ஆளுடையார்க்கு செங்குடி ஆசாரியன் கொடுதத் ஒரு நீலக் கொடை பற்றிய செய்தியை இக்கல்வெட்டு தருகிறது. மேலும் ஆறு துண்டுக் கல்வெட்டுகள் சுப்பிரமணியர் கோயிலின் சுவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்துக் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் எழுத்தமைதி கொண்டு இவை கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளே என்று உறுதியாகக் கூறலாம்.
மேலும் இக்கோயிலில் தற்போது வைக்கப்பட்டுள்ள இரண்டு நந்திகளின் சுற்சிலைகளும், விநாயகர் சிற்பம் ஒன்றும் பிற்பாண்டியர் கலைச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இவற்றின் மூலம் கி.பி.12-13-ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர் செழித்து விளங்கியது என்பது பெறப்படுகிறது.
சதிக்கல்
ஊரின் நுழைவாயிலின் நான்கு தூண்களுடன் கூடிய ஒரு சிறு மண்டபம் சாலையின் ஓரத்தில் காணப்படுகிறது. இம்மண்டபத்தின் நடுவில் கணவனும்,
மனைவியுமாக இரண்டு உருவங்கள் நின்றநிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு
உருவங்களையும் சுற்றித் தலைக்கு மேலாகத் திருவாசிகை ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது.
உடன்கட்டை ஏறிய தம்பதிகளின் நினைவாக வைக்கப்பட்டுதாக இச்சிற்பந்தைக் கருதலாம். வலப்பக்கம் பெண்ணும், இடப்பக்கம் ஆணும் நிற்கின்றனர்.
ஆண் உருவத்தின் வலது கரத்தில் வாளும் இடது கரத்தில் கேடயமும் காணப்படுகிறது. சற்றே வளைந்த தலைப்பாகையும், எளிமையான அணிகலன்களும்,பாதம் வரை ஆடையும் கொண்டுள்ளது இவ்வுருவம். பெண் உருவத்தின் வலது கையில் உடைந்த நிலையில் உள்ள ஒரு அமைப்பு பூமாலை போலத் தோன்றுகிறது. இடக்கையில் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பிடித்துள்ளாள். தலை அலங்காரம் கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டு நாயக்கர் சிற்பங்களில் உள்ளது போன்று சற்றே கொண்டை இடப்புறம் சரிந்தள்ளது. கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டின் நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ள இச்சிற்பங்கள் அன்றைய பாளையக்காரரின் சதிக்கல் சிற்பம் எனக் கருத வாய்ப்புள்ளது. உடன்கட்டை ஏறிய அவ்விருவரின் நினைவாக இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டு ஒரு சிறு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கன ஆய்வின் மூலமாக இவ்வூரின் வரலாறு கி.பி. 12-ஆம் நூற்றாண்டுவரை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட வரலாற்றில் பாவாலியின் இடம் குறிப்பிடத்தக்கதாய் மாறியுள்ளது.
நன்றி உயர்திரு சாந்தலிங்கம் ஐயா
பாண்டியர்கள்_தேடி_பயணம்





