Temple

அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்
சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சிற்பங்களின் காலத்தை
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம்.

அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது.

இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார். திருமால் அணிந்துள்ள நீண்ட கூம்பு வடிவ கிரீடம், கனத்த காதணிகள், அலங்கரிக்கப்பட்ட வளைந்து செல்லும் பட்டையான முப்புரிநூல், எளிய அணிகலன்கள், கீழாடையின் வடிவமைப்பு போன்ற சிற்பவியல் தன்மைகள் இச்சிற்பத்தை முற்காலப் பாண்டியர்களின் கலைப்படைப்பு எனத் தெளிவாக உணர்த்துகின்றன. திருமால் சிற்பத்தின் நீண்ட உடலமைப்பும் நீள்வட்டவடிவ முகத்தோற்றமும் இச்சிற்பத்தில் பல்லவ சிற்பக்கலையின் தாக்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

அம்பாசமுத்திரம் காசிபநாதர் கோயிலின் தெற்கு வெளிப்பிரகாரத்தில் யானையின் மீது பரியங்காசனத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கும் இந்திரனின் முற்காலப் பாண்டியர்காலச் சிற்பம் தனியாக காணப்படுகிறது. இந்திரன் சிற்பத்தின் நறுங்கிய உடல்கூறு அமைப்பு, வட்ட வடிவ முகம், குறைவான அணிகலன்கள் ஆகியன முற்காலப் பாண்டியர்களின் சிற்பக்கலைத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. இச்சிற்பம் முன்னர்

காசிபநாதர் கோயிலில் அமைந்துள்ள எரிச்சாவுடையார் கோயிலின் கிழக்கு கிரீவ கோஷ்டத்தில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

அம்பாசமுத்திரம் வட்டம் அரிகேசரிநல்லூரிலுள்ள அரிகேசநாதர் கோயிலின் தெற்கு வெளிப்பிரகாரத்தில் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர், சேட்டை ஆகியோரின் சிற்பங்களும், கிழக்கு வெளிப் பிரகாரத்தில் காவல்பூதச் சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சேட்டை மற்றும் காவல்பூத உருவங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன.

லகுலீசர் சிற்பத்தில் லகுலீசர் இரண்டு கரங்களுடன்
யோக நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் தோற்றமளிக்கிறார்.

இவரின் மடக்கித் தூக்கிய வலதுகரம் அக்ச மாலையைப் பற்றியவாறும் இடது கரம் தொடையின் மீது வைத்தவாறும் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தில் லகுலீசரின் இடுப்பு மற்றும் தூக்கிய வலதுகையைச் சுற்றி யோக பட்டையொன்று காணப்படுகிறது.

சேட்டை அமர்ந்த நிலையில் காணப்படும் சிற்பத்தில் அவளுக்கு வலப்புறம் அவளின் மாட்டுத்தலை மகனும், இடப்புறம் அவளின் மகளும் காணப்படுகின்றனர். சேட்டை இவர்கள் இருவரையும் தழுவியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

சேட்டை உருவத்தின் உடல் மற்றும் முக அமைப்பு. அவளின் கிரீடத்தின் கீழ் காணப்படும் தடித்த உருளை வடிவ அமைப்பு, கனத்த காதணிகள் போன்றவை இச்சிற்பத்தில் இடம் பெறும் குறிப்பிடத் தக்க முற்காலப் பாண்டியர் காலச் சிற்பவியல் தன்மைகளாகும்.

நன்கு புதையுண்டுள்ள காவல்பூதச் சிற்பம்  தன்னுடைய மடக்கிய வலது கையில் கதாயுதத்தைத் தூக்கியவாறு காட்சியளிக்கிறது. இச்சிற்பத்தின் உருவத்தோற்றமும், அணிகலன்களின் அமைப்பும் இது முற்காலப் பாண்டியர்களின் கலைப்படைப்பு என உணர்த்துகின்றது.

பதிவு :ஆசிரியர் கண்ணன்
பாண்டியர்கள்தேடிபயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *