தமிழ் நாட்டில் கோயிலில்லா ஊர் இல்லை. பண்டை நாளில் கோயில்கள் சிறந்து விளங்கின. சமுதாயம், வாணிகம், ஆட்சி, நிர்வாகம், நீதி முதலிய பல துறைப் பணிகளும், கோயிலிலிருந்தே நடைபெற்றன. ஊர் நிர்வாகங்கள் முழுவதும் கோயில்களிலேயே நடந்தன எனவே பலவகைச் செய்திகளையும் தருகிற
கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலேயே அமைக்கப்பட்டன. அன்றியும் அவ்வக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் அவற்றில் காணலாம்.
தமிழகத்தில் கல்வெட்டுகள் தமிழிலும் ஸம்ஸ் கிருதத்திலும் பொறிக்கப்பட்டன. தமிழ்மொழியைத் தமிழ் எழுத்திலும், ஸம்ஸ்கிருதத்தைக் கிரந்த
எழுத்திலும் பொறித்தனர்.
கல்வெட்டுகளில் பெரும்பாலும் முதலில் ‘ஸவஸ்தி’, ‘ஸ்ரீ’ என்ற இரு சொற்கள் காணப்படும். அதற்கு அடுத்து மெய்க்கீர்த்தி, அதன்பின் மன்னன் பெயரும் அவர் ஆட்சியாண்டும் காணப்படும். க்கு யாண்டு பத்தாவது என்றால் அம்மன்னன் பட்டத்திற்கு வந்து ஒன்பதாண்டுகள் முடிந்து பத்தாவது ஆண்டு நடக்கிறது என்று பொருள். எனவே ஒரு மன்னனுடைய முப்பதாவது ஆண்டு கல்வெட்டு கிடைத்தால் அம் மன்னன் முப்பது ஆண்டுகளுக்குக் குறையாத காலம் ஆட்சி செய்தார் என்பது புலப்படும். இங்ஙனமே அரசர்கள் ஆண்ட கால அளவை ஓரளவு செம்மையாகக் கணக்கிட முடியும்.
கல்வெட்டுகளில் அப்பகுதி மிகத்தெளிவாகக் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக “பாண்டிய குலாசனி வளநாட்டு, தஞ்சாவூர்க் கூற்றத்து, தஞ்சாவூர்” என இராஜராஜனின் தஞ்சாவூர்க் கல்வெட்டில் காணலாம்.
வளநாடு என்பது தற்காலத்திய மாவட்டம் (District) என்றும் கூற்றம் என்றால் வட்டம் (Taluk) என்றும் கொள்ள வேண்டும். இங்ஙனமே
வளநாட்டை கோட்டம் என்றும் கூற்றத்தை நாடு என்றும் குறிப்பிடவும் பெறும்.
கல்வெட்டுகளில் பலவகை அறக்கொடைகளும் காணப்படும். அவற்றிற்கு உடலாக (மூலதனமாக) நிலம், ஆடுமாடுகள் அல்லது பொருள் (Cash) கொடுத் ததும் புலப்படுத்தப்படும். அறக்கொடைகளில் நந்தா விளக்கு எரிப்பதற்காக என்றும், பூசை படித்தரத்திற்காக என்றும், நாள்தோறும் மலர்மாலை வழங்குவதற்காக என்றும், திருப்பதியம் (தேவாரம், பிரபந்தம்) ஓதுவதற்காக என்றும், இசைக் கருவிகள் ஒலிப்பதற்காக என்றும், நாட்டியம் ஆடுவதற்காக என்றும், திருவிழா எடுப்பதற்காக என்றும் கோயில் திருப்பணி செய்வதற்காக என்றும் இன்னும் பிற பணிகளுக்காக என்றும் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றியும் திரு மேனிகள் எழுந்தருளிவித்த செய்தியும் ஆபரணங்கள் கொடுத்த செய்தியும் கல்வெட்டுகளால் புலப்படுத்தப்படும்.
பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலிருந்த வேலி, மா, குழி, குறுக்கம், செய், தடி போன்ற பலவகை நில அளவைகளைக் கல்வெட்டுகளில் காணலாம். பொதி, கலம், மரக்கால், படி, உழக்கு போன்ற பெய்தல் முகத்தல் அளவைகளையும், பலம், கஃசு, வராகனெடை, கழஞ்சு, குன்றி போன்ற பொன் நிறுவை அளவைகளை யும், பாரம், துலாம், வீசை, பலம் போன்ற பண்ட நிறுவை அளவைகளையும், பாகம், முழம், சாண், விரல் போன்ற நீட்டல் அளவைகளையும் கல்வெட்டுகள் உணர்த்தும்.
முதலீட்டுக்குப் பொலிசைப் பலியூட்டு (வட்டி) விவரமும், பல்வேறு துறைமக்களுக்கு ஊதிய விவரமும், பல்வேறு மக்கள் செலுத்தும் பல்வகை வரியும், வரி விதிப்புக்குரியவை எவை எவை என்பதும், குற்றத்திற்குரிய தண்டனை விவரமும் பல்வேறு பணிக்குரியவர்களுடைய தகுதியும், இன்னும் இவை போன்ற பொருளாதார சமுதாய ஒழுங்கு முறை விதிகளும் கல்வெட்டுகளில் அறியக் கிடக்கின்றன.
கல்விமுறை பற்றிய விவரங்களும் கூட கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கின்றன. அடிப்படைக் கல்வியேயன்றி பல்கலை பயிற்றும் கல்லூரிகளும் இருந்தன. அவை பெருங்கோயில்ளிலேயே அமைந்திருந்தன. எனவே அவற்றைத் “திருச்சுற்றலைக் கல்லூரி” என கல்வெட்டுகள் கூறும். அங்கு என்னவென்ன கலைகள் கற்பிக்கப்பட்டன; ஆசீரியன்மார் தகுதி என்ன; அவருக்கு அளித்த ஊதியம் அல்லது நிலக்கொடை விவரம்; ஒவ்வொரு துறையிலும் எத்தனை மாணாக்கர்கள் பயின்றனர்.ஊராட்சி முதலியவற்றில் மாணாக்கர்கள் பங்குபெறலாமா, கூடாதா? என்பனபோன்ற செய்திகளும் கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கின்றன.
சிறந்த பெருங்கோயில்களில் ஆதுரசாலைகள்
(ஆஸ்பத்திரி)ஆதுலர்சாயைகள் (ஆற்றமாட்டார் புகலிடம்) ஆகியவை இருந்தன. ஆதுரசாலைகளில் மருத்துவப் பணி புரித்தவர்களுக்கு விட்டமானியம் அதவது “வைத்தியக்காணி” அல்லது “வைத்திய விருத்தி ” நிலப் பற்றிய குறிப்புக்களும் எத்தனை பேருக்கு அங்கு வைத்திய வசதி.அறுவை வைத்தியம் செய்பவர் தொகை, நோயாளருக்குக் கொடுத்த பத்திய உணவு மருந்து வகைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தகணக்கு போன்றனவையும் கல்வெட்டுகளிலிருந்து
காணமுடிகின்றன.
ஒரு நாட்டின் செம்மையான வரலாற்றை அந்நாட்டில் வழங்கிய எழுத்துக்களின் மூலம் எப்பொழுதுகணிக்கப்படுகிறதோ அது தொடங்கியே வரலாற்றுக் காலமும் தொடங்குகிறது. சிந்துவெளிப் பண்பாடுதான் இந்தியாவின் கணித்தறியக்கூடிய பண்பாட்டுக் காலம் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அக்காலத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்பர் புலவோர். அகழ்வாரய்ச்சியின் மூலம் அங்கு கிடைத்தவற்றில் பல முத்திரைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஓவிய எழுத்துக்கள் (Pictograph) உள்ளன. அவ்வெழுத் துக்கள் உணர்த்தும் பொருள் என்ன என்பது இன்னும் புலப்படுத்தப் படவில்லை. எழுத்துக்கள் காணப்பட்ட போதிலும் பொருள் புலப்படாத நிலையில் அதை வரலாற்றுக்கு முந்திய காலம் என்பர். அதற்குப் பின்னர் அசோகன், பாண்டியர் காலத்துக் கல்வெட்டு கள் பொருள் புலப்பட கிடைத்துள்ளன. எனவே அக் காலத்தையே-அதாவது சுமார் 2500 ஆண்டுக் காலத் தையே-வரலாற்றுக் காலம் என நம்மைப் பொறுத்த வரையில் கணிக்கலாம்.
அசோகர் காலத்து எழுத்துக்கள் இருவகைப்படும். ஒன்று ‘பிராமி’. அது இடமிருந்து வலமாக எழுதப்படுவது. மற்றொன்று ‘கரோஷ்டி’. இது வலமிருந்து இடமாக (உருது எழுதுவதைப் போல) எழுதப்படுவது. இந்தியாவின் பல பகுதிகளிலும் ‘பிராமி’ காணப்படுகிறது. கரோஷ்டியோ இந்திய வடமேற்குப் பகுதியில் மட்டும் பொறிக்கப்பட்டது. தமிழகத்திலும் அதை யொட்டியபகுதிகளிலும் காணப்படும் எழுத்து “தாமிழி” எனப்படும். நாமிழிக்கும் பிராமிக்கும் பொது எழுத்துக் களில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகிறது. ஆகவே தாமிழியைப் பிராமி என்று முன்னாளில் மயங்கினர். ஆனால் முதுபெரும் அறிஞர் கே. வி. சுப்பிரமணிய ஐயர் செய்த சிறந்த ஆராய்சியின் மூலம் இவை பிராமி அல்ல என்பதும் தாமிழியே என்பதும் நிலைநாட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து செய்துவரும் பல்வேறு அறிஞர்களின் ஆராய்ச்சியும் தமிழ்மொழி பிறமொழி களில் உள்ள பழம் நூல்களும் இம்முடிவுக்கு அரணும் வலிவும் ஊட்டுகின்றன.
