சோழப் பேரரசை வீழ்த்திய மன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியருடைய கல்வெட்டு ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. அது இம்மன்னனுடைய 13ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சுந்தரபாண்டிய தேவரின் திருமேனிக்கு நன்றாகக் கடல் மல்லைப் பெருமானுக்கு ஒரு விசேஷ வழிபாட்டை ஆமூர் நாட்டுப் பைய்யனூரான ராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாசபையோர் ஏற்படுத்தினர் என்ற செய்தியைக் காண்கிறோம்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசை வீழ்த் தியபோது, நெல்லூர்ப் பகுதியை ஆண்டு வந்த தெலுங்குச் சோழர் கண்டகோபாலன் என்பவனையும் தோற்கடித்தான். தெலுங்குச் சோழர்கள். சோழப் பேரரசர்களுக்கு உறுதுணையாக இப்பகுதியில் இருந்தவர்கள். அவர்களில் மிகச் சிறந்த வன் கண்டகோபாலன் என்பவன். சுந்தரபாண்டியனால்
தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இப்பகுதியில் கண்டகோபாலன் மிகச் செல்வாக்குடன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டு ஒன்றும் மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. அது இக்கோயிலில் விளக்கு எரிப்பதற்குக் கொடுத்த பரிசைப்பற்றிக் குறிக்கிறது.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப்பட்டவர்களுள், காடவர் தலைவன் கோப்பெருஞ்சிங்கன் என்பவனும் ஒருவன் . அவன் மல்லைக்காவலன் என்றும் மல்லாபுரி மாதவன் என்றும் பட்டம் பெற்றிருந்தான் என்று முன்பே கண்டோம்.முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் தொடங்கி வீரபாண்டியன் காலம் முடிய, மாமல்லபுரம் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு
பாண்டியநாடு அறக்கட்டளை
